உள்ளூர்

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது – யாழ் மாவட்ட அரச அதிபர்

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டமானது பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் நேற்று முன்தினம் (21-03) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல்வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தம் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அவர்கள் மேலும் வினைத்திறனாக செயல்பட பிரதேச செயலாளர்கள் வழிப்படுத்த வேண்டும் என பதில் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

மேலும், மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் யூன் மாதம் 18 ஆம் திகதி பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாவும் அதற்கு முன்பாக பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவையை மே மாதம் 16ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பதில் அரச அதிபரால் அறிவுறுத்தப்பட்டது.

பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு 9 மற்றும் ஆண்டு 9 இற்கு கீழும் உள்ள பிள்ளைகளுக்கான அறநெறி வகுப்புகள், இணைப் பாடவிதானச் செயல்பாடுகள் மற்றும் ஒய்வுகளைக் கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தல் என்ற தீர்மானத்துக்கு அமைய, பெற்றோர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் சீரான கட்டுப்பாட்டில் பேணுவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கண்காணிப்பு அவசியம் பிரதீபன் வலியுறுத்தினார்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர் பிரிவு இயங்காமல் உள்ளதாகவும், அதற்கான சேவைகள் முறைப்பாட்டுப் பிரிவுடன் இயங்குவதாகவும் கூட்டத்தில் பிரதேச செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, உடனடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட பதில் அரச அதிபர், ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து செயல்பட நடவடிக்கை எடுப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாகவும் அதன் முன்னேற்றத்தை பிரதேச செயலாளர் அறிக்கையிடுமாறும் பதில் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதில் அரச அதிபர் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் நகர்ப்புற பாடசாலை மாணவர்கள், பரீட்சை நிறைவடைந்து வெளிவரும் போது அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் துண்டுப் பிரசுரங்களை திணிப்பதாகவும், யாழ்ப்பாணம், நல்லூர், மல்லாகம் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசத்தில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முன்பாக பெற்றோர்கள் கூடுதலாக தரித்து நிற்பதால் பொது மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைக்காக ஆவன செய்வதாக பதில் அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

தாய், தந்தையை இழந்து பிள்ளைகளை பராமரிப்போருக்கு மாதாந்தக் கொடுப்பனவு மாகாணத்தால் 3000 ரூபாய் வழங்கப்படுவதாகவும், தொண்டு நிறுவனங்கள் 5000 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்த மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், பராமரிப்பாளர்கள் இக் கொடுப்பனவை பெறுவதற்கு நீதிமன்றக் கட்டளை பெறவேண்டும் எனவும் கூறினார்.
இதேவேளை, சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்கு உறுதுணையாகவிருக்கும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்குரிய சேவையை வினைத்திறனாக வழங்குவதன் ஊடக தமது வாழ்க்கையிலும் சிறப்படைய முடியும் என பதில் அரச அதிபர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்